பரமக்குடியில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்
பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை பிரம்மோத்சவ விழாவை முன்னிட்டு நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை தேரோட்டம் நடக்கிறது. பரமக்குடி ஈஸ்வரன், மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.,10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பிரியாவிடையுடன் சுவாமி, அம்பாள் நந்தி, கிளி, குண்டோதர, சிம்ம, கைலாச, அன்ன, ரிஷப, குதிரை வாகனங்களில் வீதியுலா வந்தனர். நேற்று காலை ஈஸ்வரன் கோயிலில், சந்திரசேகரசுவாமி மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. பின்னர் 11.30 மணிக்கு மணப்பந்தலில் ஊஞ்சல் சேவையில் விசாலாட்சி அம்மனுக்கும் - சந்திரசேகர சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதுபோன்று மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை 6 மணிக்கு சுந்தரேஸ்வரர் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்துடன், மீனாட்சிக்கும் - சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. மணவிழாவில் ஏராளனமான பெண்கள் பங்கேற்று தங்களது தாலி கயிறுகளை புதுப்பித்துக் கட்டிக்கொண்டனர். பின்னர் இரண்டு கோயில்களிலும், இரவு 8 மணிக்கு சுவாமி பிரியாவிடையுடன் யானை வாகனத்திலும், அம்பாள் பூப்பல்லக்கிலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்திரை திவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.