சித்ரா பவுர்ணமிக்கு 1,700 சிறப்பு பஸ்கள்
சித்ரா பவுர்ணமிக்கு, தமிழகத்தின் பல இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு, 1,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தன்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், கிரிவலம் செல்ல, லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இதற்காக, விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.இது குறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, வேலுார், கடலுார், விழுப்புரம், புதுச்சேரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து, 1,716 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சென்னை, கோயம்பேடு பஸ் நிலையம், தாம்பரம், பெருங்களத்துார், அடையாறு ஆகிய இடங்களில் இருந்து மட்டும், 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சிறப்பு பஸ்களுக்கு செல்வோர், வரிசையில் நின்று, 10 ரூபாய், டோக்கன் வாங்க வேண்டும். அதன் பின், அவர்களுக்கான பஸ்சில் பயணிக்கலாம். இந்த முறை, 1 டூ 5 என, குறைந்த நிறுத்தங்களுடன் கூடிய, 150 பஸ்கள் இயக்கப்படும். இதில், அல்ட்ரா டீலக்ஸ் வகையிலான, 50 பஸ்களும் அடங்கும்.சென்னை, பெருங்களத்துார், மேல்மருவத்துார், செஞ்சி, திருவண்ணாமலை ஆகிய, ஐந்து இடங்களில் மட்டுமே, இந்த பஸ்கள் நின்று செல்லும். நேற்று இரவு முதல், சிறப்பு பஸ்கள் இயக்கம் துவங்கி விட்டது. பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப போதிய பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை - திருவண்ணாமலை பஸ்
கட்டண விபரம் ரூபாயில்
பஸ் வகை கட்டணம்
சாதாரண பஸ் 110
1 டூ 5 வகை பஸ் 120
1 டூ 5 அல்ட்ரா டீலக்ஸ் பஸ் 140