பழநி பக்தர்கள் நீராடும் இடும்பன் குளத்தில் குப்பை
பழநி: பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீராடும் இடும்பன்குளத்தில் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பை குவிந்துள்ளதை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. பழநி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பை-பாஸ் ரோடு அருகேயுள்ள இடும்பன்கோயில் குளத்தில் குளித்துவிட்டு இடும்பனை வணங்கி, அதன்பின் மலைக்கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது கோடையில் இக்குளத்தில் தண்ணீர் உள்ளது. குளத்தின் கரைப்பகுதியில் பக்தர்கள் குளித்தபின் விட்டுச் சென்ற துணிமணிகள், சோப்பு, ஷாம்புஉள்ளிட்ட பிளாஸ்டிக் பைகள் என ஏராளமான குப்பை குவிந்து அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் அமலச்செடிகள், சீமைக்கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இவற்றால் குளத்தின் தண்ணீர் மாசு படிந்து பாழாகிகிறது. எனவே பாலிதீன், துணிமணி குப்பையை அகற்ற கோயில் நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.