கணங்கூர் சிவன் கோவிலில் உற்சவர் சிலைக்கு குடமுழுக்கு
தியாகதுருகம்: கணங்கூர் சிவன் கோவிலில், உற்சவர் சிலைக்கு திருகுடமுழுக்கு விழா நடந்தது. தியாகதுருகம் அடுத்துள்ள கணங்கூர் கிராமத்தில் நுாற்றாண்டு பழமையான பர்வதவர்த்தினி உடனுறை ராமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. பக்தர் முயற்சியால் சுவாமி மற்றும் அம்மனுக்கு இரண்டரை அடி உயர ஐம்பொன் சிலை வடிவமைக்கப்பட்டது. கரிகோலமாக திருவீதியுலா நடத்தப்பட்டு கோவிலில் வைத்து, ஆகமவிதிப்படி திருகுடமுழுக்கு விழா நேற்று நடந்தது. சிவாச்சாரியார் சீத்தாராமையர் தலைமையில் வேதமந்திரங்கள் மற்றும் தேவாரம், திருவாசகம் ஓதி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, குடமுழுக்கு நடந்தது. அதைத் தொடர்ந்து ராமநாதீஸவரர் சுவாமிக்கும் பர்வதவர்த்தினி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு சர்வ அலங்காரத்தில் திருவீதியுலா நடந்தது. சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.