தர்மருக்கு இன்று பட்டாபிஷேகம்
ஆர்.கே.பேட்டை : கவுரவர்கள் மற்றும் பஞ்ச பாண்டவர்களுக்கு இடையே நேற்று நடந்த 18ம் நாள் போரில், துரியோதனனை கொன்று, பாண்டவர்கள் வெற்றி கொண்டனர். இதை தொடர்ந்து, தர்மருக்கு இன்று பட்டாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆர்.கே.பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவத்தில், நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. 10 ஆண்டுகளுக்கு பின், நடைபெறும் உற்சவத்தை காண, திரளான பக்தர்கள் வந்திருந்தனர். காலை, 11:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் தெருக்கூத்து கலைஞர்களால், துரியோதனன் படுகளம் நடத்தப்பட்டது.பீமசேனன் தன்னுடைய கதாயுதத்தால், துரியோதனனை தாக்கி வீழ்த்தினான். துரியோதனன் குருதியை பாஞ்சாலி கூந்தலில் தடவி, முடிந்து தனது சபதத்தை நிறைவேற்றனாள். மகனை இழந்த காந்தாரி, போர்க்களத்தில் வேடிக்கை பார்க்க கூடியிருந்தவர்களை துடைப்பத்தால் ஆவேசத்துடன் அடித்து விரட்டினார்.திருவிழாவில் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள், மாலை, 6:00 மணிக்கு அக்னி குண்டத்தில் இறங்கி, தங்களின் விரதத்தை நிறைவு செய்தனர். நேற்றைய போரில் கவுரவர்களை வெற்றி கொண்ட பாண்டவர்கள், இன்று காலை, 11:00 மணிக்கு தர்மராஜாவுக்கு பட்டாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளனர்.