பறவைக்காவடியில் வால்பாறை பக்தர்கள் ஊர்வலம்!
ADDED :3502 days ago
வால்பாறை: வால்பாறை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாகச்சென்றனர். வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலின், 29 ம் ஆண்டு திருவிழா கடந்த 20ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்றுமுன்தினம் இரவு, 9:00 மணிக்கு பக்தர்கள் பூவோடு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இரவு, 10:30 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து ஊர்வலமாக வந்த பக்தர்கள், பூக்குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை, 3:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து பக்தர்கள் அலகு பூட்டியும், பறவைக்காவடி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்துடன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.