வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரை
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள், பாத யாத்திரையாக வந்து சிறப்பு வழிபாடு செய்தனர். நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவிலில் தேவார பாடல் பெற்ற, தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இத்தலத்தில், புகழ்பெற்ற செல்வமுத்துக்குமார சுவாமிக்கும், நவ கிரகங்களில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தின், இரண்டாவது செவ்வாய் கிழமையில் சிறப்பு வழிபாடு செய்ய, சிவகங்கை, செட்டிநாடு, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக, இக்கோவிலுக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு, மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர். அவர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தாங்கள் வழிநடைக்கு துணையாக கொண்டு வந்த கம்புகளை, கொடிமரத்தில் காணிக்கையாக செலுத்தினர்.