மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்!
புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவருக்கும், உற்சவருக்கும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலையிலேயே மக்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் உள்ளிட்ட பிரசாதங்கள் காலையில் துவங்கி இரவு வரை இடைவிடாமல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. வெள்ளி மூஷிக வாகனத்தில் சுவாமி வீதியுலா மாலையில் நடந்தது. கோவில் மண்டபத்தில், பொன் சண்முகம் குழுவினரின் நாத லய சங்கமம் இசை நிகழ்ச்சி காலையில் நடந்தது. மாலையில், சத்தியநாராயணாவின் கீ போர்டு இசை நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி வேங்கடேசன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.