உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அட்சயதிருதியையில் உப்பு வாங்கினால் வளம் பெருகும்!

அட்சயதிருதியையில் உப்பு வாங்கினால் வளம் பெருகும்!

சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை நாள் அட்சயத்திருதியை என்று போற்றப்படுகிறது. அட்சயம் என்றால் வளருதல் என்று பொருள். இந்த நாளில் எந்தப் பொருள் வாங்கினாலும் சிறப்புதான். அன்று தானதர்மம், புதுக்கணக்கு ஆரம்பம், கல்வித் துவக்கம், விரதம், தெய்வ வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்வது உத்தமம். இப்படிப்பட்ட அட்சயத்திரிதியைப் பற்றி புராணக் கதைகள் பல உண்டு. ஏழ்மையில் வாடிய கண்ணனின் நண்பர் குசேலர் ஒரு பிடி அவலை எடுத்துத் தனது கிழிந்த மேலாடையில் முடிந்து கொண்டு, கண்ணனை சந்திக்கச் சென்றார். குசேலரை வரவேற்று உபசரித்த கண்ணன், அந்த அவலை எடுத்துச் சாப்பிட்டபடி, அட்சயம் என்றார். உடனே, குசேலரின் குடிசை, மாளிகை ஆனது. குசேலர், குபேரசம்பத்து பெற்றார். குசேலருக்கு, கண்ணன் அருள் புரிந்தது அட்சயத்திருதியை திருநாள் ஆகும்.

கண்ணபிரான், அட்சய திருதியைப் பற்றி தருமருக்கு ஒரு கதை கூறியதாக பவிஷ்யோத்ர புராணம் விளக்குகிறது. சாகல் என்ற நகரில் தர்மன் என்ற ஏழை வணிகன் ஒருவன் இருந்தான். தெய்வ பக்தி மிகுந்தவன். அவன், வருடம் தோறும் அட்சயத்திருதியையின் போது புனித நதியில் நீராடி இயன்றளவு தானதர்மங்களை செய்தான். இதனால் மறுபிறவியில் அரசனாகப் பிறந்தான். அப்போதும் அட்சயத்திருதியை நாளில் தானதர்மங்கள், யாகம், வஸ்திர தானம், அன்னதானம் ஆகியவற்றைச் செய்து மேன்மேலும் சிறப்புப் பெற்றான்.

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், அட்சயத்திருதியை அன்று புனித நதியில்நீராடி, தான - தர்மங்கள் செய்தால் உடல் பிணி நீங்கும் - மாற்றுத் திறனாளிகளுக்கு வஸ்திர தானம் செய்தால் ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்.

இந்த நாளில் சிவ பெருமான் - பார்வதி, ஸ்ரீமன் நாராயணன், லட்சுமி ஆகியோரை பூஜித்தால் சகல பாக்கியங்களும் கிட்டும். அன்று, பித்ருக்களுக்கும், மறைந்த முன்னோருக்கும் சிரார்த்தம், பூஜை செய்தால் பாவ விமோசனம் பெறலாம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் அட்சயத்திருதியை அன்று சுவர்ணகவுரி விரதம் கடைப்பிடிக்கிறார்கள். அன்று கவுரி எனப்படும் பார்வதி தேவி தனது பிறந்த வீட்டுக்கு வருவதாகவும், மறுநாள் அன்னைக்குப் பாதுகாப்பாக விநாயகர் வருவதாகவும் ஐதீகம். திருமணமான பெண்கள், இந்த நாளில் சுமங்கிலி பூஜை செய்து, மற்றவர்களுக்கு ஆடை வழங்குவது வழக்கம்.

மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட போது, திரௌபதி சூரியபகவானை வேண்டிப் பெற்றது அட்சயப் பாத்திரம். இதிலிருந்து உணவை எடுக்க எடுக்கக் குறைவில்லாமல் வந்து கொண்டிருக்கிறது. அதே போல், ஒருமுறை காசிமாநகரில் கடுமையான பஞ்சம் வந்தபோது, அன்னை பார்வதிதேவி, அன்னபூரணியாக அவதாரம் எடுத்து, தன் கையில் அட்சயப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு, உலகில் உள்ள அனைவருக்கும் உணவளித்து பசிப்பிணிப் போக்கினாள். என்று காசி புராணம் கூறுகிறது.

இந்த நாளில், தங்கம் வாங்கினால் செல்வளம் பெருகும் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். இது குறித்து எந்த சாஸ்த்திரத்திலும் தகவல் இல்லை என்று வேத விற்பன்னர்கள் கூறுகிறார்கள். அன்று உப்பு வாங்கினால், மகாலட்சுமி மகிழ்ந்து செல்வவளம் தருவாள். உப்பு கடலிலிருந்து வெளிவந்தது. மகாலட்சுமியும் கடலிலிருந்து உதித்தவள். மேலும் மஞ்சள் வாங்கினாலும் மங்கள வாழ்வு கிட்டும்.

கிருதயுகம் தோன்றியதும், பரசுராமர் அவதரித்ததும் இந்த அட்சயத்திருதியை திருநாளில்தான். அட்சயத்திருதியை அன்று ஏழைகளுக்கு ஆடைதானம் அளித்தால், மறு பிறவியில் ராஜவாழ்வு கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. மேலும், தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால், திருமணத்தடை அகலும், உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள், அகால மரணம் போன்றவை சம்பவிக்காது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும். பசுமாட்டிற்கு வாழைப்பழங்கள், புல் அளித்து பின்புறம் தொட்டு வணங்கினால், மகாலட்சுமி அருள் கிட்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !