பூமிக்கு ஓய்வு கொடுக்கும் விழா: கோத்தரின பழங்குடிகள் கொண்டாட்டம்!
ஊட்டி :இயற்கையை வணங்கி, வளங்களை வாரி வழங்கும், பூமிக்கு ஓய்வு கொடுக்கும் விழாவை, கோத்தர் இன பழங்குடி மக்கள் கொண்டாடினர். நீலகிரியில் கொல்லிமலை, சோலுார் கோக்கால், குந்தா கோத்தகிரி, கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, கூடலுார் என, ஏழு ஊர்களில், கோத்தரின பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இயற்கையை கடவுளாக வணங்கும் அவர்கள், பஞ்ச பூதங்களை வழிபடுகின்றனர். அதன்படி, ஆண்டுக்கு ஒரு முறை, இயற்கையை வழிபட்டு, வளங்களை வாரி வழங்கும் நிலத்துக்கு, மூன்று நாட்கள் ஓய்வு கொடுப்பர். அந்த வழிபாடு, நேற்று கோத்தர் இன கிராமங்களில் நடந்தது. கொல்லிமலை ஊர் பூசாரி கம்பட்டீஸ்வரன் கூறுகையில், “விவசாயத்துக்கு உதவும் நிலம், உணவு தேவையை பூர்த்தி செய்கிறது. நீர் உட்பட பல வளங்களை வழங்கி வருகிறது. எனவே, பூமிக்கு நன்றி சொல்லும் வகையில், பூஜை நடத்தி, மூன்று நாட்கள் நிலத்துக்கு ஓய்வு கொடுப்போம். அந்த நாட்களில், நிலத்தில் எந்தவொரு வேலையும் செய்யாமல், மழை வளம், இயற்கை வளம் பெருக வேண்டும்; பேணி காக்கப்பட வேண்டும் என, வழிபாடு நடத்துவோம்,” என்றனர்.