வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா இன்று துவங்குகிறது
தேனி: வீரபாண்டி கவுமாரியமன் கோயில் சித்திரை திருவிழா இன்று துவங்கி 17ம்தேதி வரை நடைபெறுகிறது. இக்கோயில் சித்திரை திருவிழாவிற்கு ஏப்,. 20ல் முக் கம்பம் நடப்பட்டது. 20 நாட்களும் பக்தர்கள் முல்லைபெரியாற்றில் நீர் எடுத்து வந்து முக்கம்பில் ஊற்றி அம்மனை குளிர வைத்தனர். இன்று கோயிலில் சித்திரை திருவிழா துவங்குகிறது. இதையொட்டி மலர் விமானத்தில் அம்மன் ஊருக்குள் இருந்து கோயிலுக்கு பவனி வருகிறார். நாளை (11ம்தேதி) முத்துப்பலக்கில் அம்மன் புறப்பாடு, மறுநாள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வருகிறார். 13ம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 16ம்தேதி தேர் நிலைக்கு வருதல், அம்மன் முத்துசப்பரத்தில் தேர் தடம்பார்த்தல் நடைபெறும். 17ல் ஊர்பொங்கலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தென் மாவட்ட அளவில் பக்தர்கள் இரவு பகலாக அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்துவார்கள். பக்தர்கள் வசதிக்காக தேனியில் இருந்து மதுரை, திண்டுக்கல், வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் 100 சிறப்பு பஸ்கள் இயக்குகின்றன. மாவட்டம் முழுவதும் இருந்து வீரபாண்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
போக்குவரத்து மாற்றம்: தேனியில் இருந்து சின்னமனுார், கம்பம் செல்லும் வாகனங்கள் உப்புக்கோட்டை விலக்கில் இருந்து குச்சனுார், மார்க்கையன்கோட்டை, சின்னமனுார் சென்றடையும். கம்பத்தில் இருந்து தப்புக்குண்டு, தாடிச்சேரி, நாகலாபுரம், கொடுவிலார்பட்டி, அரண்மனைப்புதுார் வழியாக வாகனங்கள் தேனி வந்தடையும். திருவிழாவிற்காக உப்புக்கோட்டை விலக்கு, வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே என இரண்டு தற்காலிக பஸ் ஸ்டாண்ட்டுகள் அமைக்கப்படுகிறது. 200 போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டள்ளனர்.