பழநி வரும் பக்தர்களே உஷார்: வசூல் வேட்டையில் புரோக்கர்கள்!
பழநி: பழநிஅடிவாரம் தனியார் தங்கும் விடுதியை சேர்ந்த சில புரோக்கர் கள் சுற்றுலாவரும் வாகனங்களை விரட்டிபிடித்து வசூல் வேட்டை நடத்துகின்றனர். தமிழகத்தின் முதன்மை ஆன்மிக தலமான பழநிகோயிலுக்கு கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக அங்கு தங்குவதற்கு விடுதிகள் கிடைப்பது அரிதாகியுள்ளது. வாடகையும் உயர்ந்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சில தனியார் தங்கும் விடுதியை சேர்ந்த புரோக்கர்கள் பழநி கோயில், கொடைக்கானலுக்கு வருவோரை மறிக்கின்றனர்.
பழநி வரும் வாகனங்களை அடிவாரம் நுழைவுப்பகுதியிலேயே வழிமறித்து பேரம் பேசுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் நிற்காத வாகனங்களை இருசக்கரவாகனத்தில் துாரத்திசெல்கின்றனர். அவர்கள் நிறுத்தும் இடத்தில் பயணிகளிடம் தங்களது விடுதியில் குறைந்த வாடகையில், நிறைய வசதிகளுடன் அறைகள் உள்ளது என ஆசைவார்த்தை கூறி அழைப்பு விடுக்கின்றனர். இதனை நம்பி செல்வோரிடம் வழக்கமாக வசூல் செய்யும் தொகையைவிட இரு மடங்கு கூடுதலாக வசூல் வேட்டை நடத்துகின்றனர். இதனால் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் பணத்தை செலவழித்தும் போதிய வசதிகள் இல்லாமல் சிரமப் படுகின்றனர். இதுதொடர்பாக பக்தர்கள், சுற்றுலா பயணிகள் புகார் அளிக்க முன்வராத காரணத்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பது இல்லை. ஆகையால் பழநி வரும் பக்தர்கள், பயணிகள் தனியார் விடுதி புரோக்கர்களிடம் ஏமாறாமல், நேரடியாக லாட்ஜ், விடுதிக்கு சென்று தங்கினால், பணத்தை பாதுகாக்கலாம். இல்லையெனில் ஏராளமாக இழக்க வேண்டியிருக்கும். பயணிகள்தான் உஷாராக இருக்க வேண்டும்.