தொகுதி கோயில்களில் விஜயகாந்த் வழிபாடு
உளுந்துார்பேட்டை,: உளுந்துார்பேட்டை தொகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று, விஜயகாந்த் சிறப்பு வழிபாடு நடத்தினார். விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அங்கேயே முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று காலை, 10:10 மணிக்கு, உளுந்துார்பேட்டைஅடுத்த உளுந்தாண்டார் கோவிலில் உள்ள, மாஷபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்ற விஜயகாந்தும் மனைவி பிரேமலதாவும் அங்கு சிறப்பு வழிபாடு செய்தனர். பின் இருவரும், பரிக்கலில் உள்ள, பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமிகோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.பரிக்கல் கோவிலில் வழிபாடு செய்த விஜயகாந்த், பின், தேர்தலில் அச்சமின்றியும், பணமோ பொருட்களோ பெறாமல், எந்தவொரு துாண்டுதலுக்கும் உட்படாமலும், நேர்மையாக சிந்தித்து வாக்களிப்பேன். தேர்தலுக்காக பணம் வழங்கவோ, பணம் பெறவோ மாட்டேன் என, உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.