சூலக்கல் மாரியம்மன் தேர் திருவிழா பூச்சாட்டுடன் துவக்கம்
பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவுக்கான, 15 நாள் பூச்சாட்டு நேற்று நடந்தது. சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா, 10 ஆண்டுகளுக்கு பின், வரும், 26ம் தேதி துவங்குகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இப்பெருவிழா, புரவிபாளையம் ஜமீனுக்கு உட்பட்ட 8 கிராமங்கள், ஜமீனுக்கு சேராத 10 கிராமங்கள் என, 18 கிராமங்கள் பங்கேற்கின்றன. இத்திருவிழாவுக்கான முகூர்த்தங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நடந்தது. தொடர்ந்து, 15 நாள் பூச்சாட்டு நேற்று இரவு ஊர் முழுக்க அறிவிக்கப்பட்டது. இம்மாதம் 26,27,28 ஆகிய மூன்று நாட்களில் தேர்வடம் பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது. தேர்திருவிழாவுக்கு முன்னதாக மாவிளக்கு ஊர்வலமும், பொங்கலிடுதலும் நடக்கிறது. தேர்திருவிழாவையொட்டி, சுற்றுப்பகுதியில் உள்ள, 18 கிராம மக்கள் தவிர, மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.