தர்ம சாஸ்தா கோவில் ஆறாட்டு எழுந்தருளல்
குறிச்சி: குறிச்சி ஹவுசிங் யூனிட்டிலுள்ள தர்ம சாஸ்தா கோவிலில், 20ம் ஆண்டு திருவிழா முன்னிட்டு, நேற்று ஆறாட்டு எழுந்தருளல் நடந்தது. விழா கடந்த, 6ல் அலங்கார தரிசனத்துடன் துவங்கியது.
மகா தீபாராதனை, அத்தார பூஜை, தீபாராதனை, பிரசாத வினியோகம், கொடியேற்றம், முளையிடுதல், அத்தாழ பூஜை, பூதபலி, பிரசாத வினியோகம், ஹரிவராசனம் நடந்தன. நேற்று முன்தினம் அதிகாலை நிர்மால்ய தரிசனத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. தர்ம சாஸ்தாவுக்கு திரவிய கலசாபிஷேகம், நவகம்; ஆஞ்சநேயர், நாகர், முனீஸ்வரர், நவக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முளபூஜை, உச்சிகால பூஜை, பூதபலி, தீபாராதனைகள் நடந்தன. இரவு, இரட்டை தாயம்பகை, பாண்டி மேளம், தீபாராதனை, பூதபலி, பள்ளிவேட்டை புறப்பாடும் நடந்தன.
நிறைவு நாளான நேற்று காலை பள்ளிக்குறுப்பு உணர்த்துதல், திருக்கனி தரிசனம், முளை எடுத்தல், மகா கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், மலர் நிவேத்யம், உஷ பூஜை, தீபாராதனை, சத்ருசம்ஹார ஹோமம், சாந்தி ஹோமம் ஆகியவை நடந்தன. மதியம் அன்னதானமும், மாலை, ஆறாட்டு எழுந்தருளலும் நடந்தன. இதனையொட்டி, சுந்தராபுரம், அய்யர் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப் அருகேயுள்ள வினாயகர் கோவிலிலிருந்து, அலங்கரிக்கப்பட்ட யானையில் தர்மசாஸ்தா ஊர்வலம் துவங்கி, பொள்ளாச்சி மெயின் ரோடு, மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக, கோவிலை சென்றடைந்தது. திரளான பெண்கள் கைகளில் விளக்கு ஏந்தி பங்கேற்றனர். கிருஷ்ணர், நரசிம்மர், லட்சுமி உள்ளிட்ட வேடமிட்ட கலைஞர்கள் காண்போரை பரவசப்படுத்தினர். ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.