ரூ.1 கோடி மதிப்புள்ள குதிரையில் கும்பமேளாவுக்கு வந்த துறவி
உஜ்ஜைன்: ம.பி., மாநிலம், உஜ்ஜைனில் நடந்த கும்பமேளாவுக்கு, ஆடம்பர சொகுசு கார்களில் வந்த துறவிகளுக்கு மத்தியில், விலை உயர்ந்த குதிரையில் வந்த துறவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ம.பி., மாநிலத்தில், பா.ஜ., கட்சியின் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உஜ்ஜைனில் நடக்கும் கும்பமேளாவுக்கு, நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான துறவிகளும், பக்தர்களும் புனித நீராட வந்தனர். பெரும்பாலான துறவிகள், சொகுசு கார்களில் வந்தனர். ஆனால், பாலக்தாஸ் என்ற துறவி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள குதிரையில் வந்திருந்தார். கறுப்பு நிறத்தில், 5.5 அடி உயரம் உடைய, அந்த குதிரையை காண, அப்பகுதி மக்கள் திரளாக வந்தனர்.
பாலக்தாஸ் கூறுகையில், ‘‘மூன்றரை வயதான இந்த குதிரைக்கு, சேத்தன் என, பெயரிடப்பட்டுள்ளது. குதிரையை வாங்குவதற்கான நிதியை, மும்பையை சேர்ந்த குதிரை வியாபாரி வழங்கினார். இந்த குதிரையால் ஆசிரமத்துக்கு பெருமை,’’ என்றார். பாலக்தாஸ் ஆசிரமத்தில், இந்த குதிரை போல், மேலும், 13 குதிரைகள் உள்ளன. இந்த குதிரைகள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தில், ‘ஏசி’ வசதி செய்யப்பட்டுள்ளது.