உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண் பொன்னாவது எப்போது தெரியுமா?

மண் பொன்னாவது எப்போது தெரியுமா?

இப்போது ஒரு மனை வாங்கிப் போட்டு, அடுத்த சில ஆண்டுகளில் விற்றால் கூட  அதிகமான லாபம் கிடைக்கிறது. மண் பொன்னாகிறது என்று சொல்கிறார்கள். இஸ்லாம் மண் பொன்னாவதைப் பற்றி வேறு மாதிரியாகச் சொல்கிறது. புளைலிப்னு இயால் என்பவர் கொள்ளைக்காரராக இருந்தார். ஒரு சமயம் ஒரு பெரியவர் குர்ஆன்  வாசிப்பதை அவர் கேட்டார். அதிலுள்ள ஒரு வசனம் இயாலின் மனதில் புயலை ஏற்படுத்தியது. அந்தக் கணத்திலேயே அவர் கொள்ளைத் தொழிலை விட்டுவிட்டார். யாருடைய பொருளை நாம் அநியாயமாக எடுக்கிறோமோ, அதை அவரிடமே திருப்பிக்கொடுத்து, மன்னிப்பும் கேட்டுக் கொண்டால் பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்ற  ரீதியில் அந்த வசனம் அமைந்திருந்தது. இயாலும், அந்த வசனத்தைப் பின்பற்றி, தான் யாரிடம் எல்லாம் கொள்ளை அடித்தாரோ அவர்களையெல்லாம் தேடிப்பிடித்து, கொள்ளைப் பொருட்களை ஒப்படைத்து மன்னிப்பும் கேட்டார். இந்நிலையில் பொருள் தீர்ந்து விட்டது. பொருளைக் கொடுக்க முடியாதவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்பு கேட்டார். அவர்களில், ஒரே ஒருவரைத் தவிர அனைவரும் அவரை மன்னித்து விட்டனர். தன்னை மன்னிக்காத அந்த நபரிடம், இயால் எவ்வளவோ கெஞ்சினார். “என்னிடம் கொள்ளையடித்ததில் சிறிதளவாவது திருப்பிக் கொடுத்தால் தான் மன்னிப்பேன்,” என அவர் சொல்லிவிட்டார். “என்னிடம் ஒன்றுமில்லையே,” என இயால் மீண்டும் கெஞ்ச, “அப்படியானால் ஒரு பிடி மண்ணை எடுத்தாவது என் பையில் போடும்,” என அந்த நபர் சொன்னார். இயாலும் அப்படியே செய்தார். அந்த நபர் சட்டைப் பையில் கையை விட்டார். அதற்குள் போடப்பட்ட மண் பொன் துகள்களாக மாறியிருந்தது. இதைக்கண்டு ஆச்சரியப்பட்ட அந்த நபர், “உமது பாவமன்னிப்பு அல்லாஹ்வால் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் வேதத்தில் யாருடைய பாவமன்னிப்பு கபூல் ஆயிற்றோ (ஏற்கப்பட்டதோ) அவர் மண்ணையள்ளிக் கொடுத்த போதிலும் அவை பொன்னாகி விடும்’ என்று சொல்லப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறேன்,”  என்றார். இந்த அதிசயம் கண்ட இயால் இஸ்லாத்தின் விசுவாசியாகி விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !