திருப்புத்தூர் கோயிலில் தெப்பம் நடத்த முடியாமல் பக்தர்கள் வருத்தம்
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு தெப்பம் நடக்கும். குளம் வறண்டதால் கடந்த 5 ஆண்டுகளாக தெப்பம் நடத்த முடியாமல் பக்தர்கள் வருத்தத்தில் உள்ளனர். திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலின் அருகாமையில் உள்ளது சீதளி தெப்பக்குளம். ஐந்து கோயில் தேவஸ்தானத்திற்கான 10ஏக்கரில் உள்ள இக்குளத்திற்கு பெரியகண்மாய் நடுமடை மூலம் நீர்வரத்து ஏற்பட்டு, குளம் நீரால் நிரம்பும். கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்ததாலும்,நீர்வரத்துக் கால்வாய் துார்ந்து போனதாலும், நீர் வரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் இக்குளம் சீரமைப்பதற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சீரமைக்கப்பட்ட பின்னர் நீர் நிரம்பாததால் குளம் வறண்டு, மக்கள் பயன்படுத்த முடியாமல் போய் விட்டது. திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக விழாவின் நிறைவு நாளன்று இக்குளத்தில் தெப்பம் நடைபெறும். பவுர்ணமி வெளிச்சத்தில் குழந்தைகளுடன் குடும்பத்தினர் வந்து தெப்பத்தை தரிசித்து செல்வது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளாக குளம் வறண்டதால் தெப்பம் நடைபெறவில்லை. பக்தர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.இந்நிலை தொடர்ந்தால் மற்ற குளங்களைப்போல அழிந்து விடும் அபாயம் ஏற்படும். தற்போது தெப்ப மண்டபத்தில் சுவாமி எழுந்தருளிச் செல்வதுடன் விழா நிறைவடைகிறது. இக்குளத்திற்கு கிடப்பிலுள்ள ரூ.3 கோடி மதிப்பிலான மேம்பாடுத்திட்டத்திற்கு நிதி அனுமதி தந்து நீர்வரத்துக் கால்வாய்களை புனரமைத்து நிரந்தரமாக நீர்வரத்து ஏற்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரியுள்ளனர்.