சபரிமலையில் இனி அன்னதானம் கிடைக்குமா?
சபரிமலை: சபரிமலையில், அன்னதானத் திட்டம் செயல்பட்டு வந்த கட்டடத்தை, தன் வசப்படுத்த, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளதால், இனிமேல், சபரிமலையில் அன்னதானம் கிடைக்குமா என்பது, பக்தர்களிடம் கேள்விக்குறியாகி விட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், கோடிக்கணக்கான பக்தர்கள், வந்து செல்கின்றனர். இங்கு அதிகளவில் செயல்பட்டு வந்த, ஓட்டல்களில் உணவின் தரம், அதிக விலை போன்ற பல்வேறு குறைபாடுகளால் பக்தர்கள் அவதிப்பட்டனர். அடர்த்தியான மலைப் பகுதி என்பதால், அங்கு தங்க வேண்டிய நிலையில் இருந்த ஏழை எளிய மக்களும் உணவின்றி சிரமப்பட்டனர். இக்குறைபாட்டை களைய, அதிக நன்கொடையாளர்கள் முன்வந்தும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, போதுமான கட்டடம் இல்லாமல் இருந்தது. இதற்காக தேவஸ்வம்போர்டு வசம் இருந்த, கட்டடத்தை அய்யப்ப சேவா சங்கத்திற்கு வழங்கியது. அக்கட்டடத்தில் தான் மூன்றாண்டுகளாக, அன்னதானத் திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தினால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிரமமின்றி உணவருந்தி வருகின்றனர். பலருக்கும் தங்குவதற்கு, இலவச இட வசதியும் கிடைத்தது. மேலும், அன்னதானத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், சபரிமலையில் தனியார் ஓட்டல்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இந்நிலையில், அக்கட்டடத்தை திருப்பித் தருமாறு தேவஸ்வம்போர்டு, அய்யப்ப சேவா சங்கத்திடம் கூறியுள்ளது. அங்கு பக்தர்கள் ஓய்வெடுக்கும் வளாகம் மற்றும் அரவணா வினியோகத்திற்கான, ப்ரீ பெய்டு கவுன்டர்கள் அமைக்க, தேவஸ்வம் போர்டு உத்தேசித்துள்ளதாக, கூறப்படுகிறது. இக்கட்டடத்தை திருப்பியளித்து விட்டால், அய்யப்ப சேவா சங்கத்தினர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு, திட்டம் என்னவாகுமோ என்ற கேள்வி, பக்தர்களிடம் எழும்பியுள்ளது.