கன்னியாகுமரி கோயிலுக்கு இரண்டு ராஜ கோபுரங்கள் தலைமை ஸ்தபதி பேட்டி
கன்னியாகுமரி:கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் இரண்டு ராஜகோபுரங்கள் மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று இந்துசமய அறநிலை ஆட்சித்துறையின் தலைமை ஸ்தபதி முத்தையா கூறினார்.இந்தியாவில உள்ள புகழ்மிக்க கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 50 லட்சம் ரூபாய் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது. கோயிலின் மேல் பகுதியில் இருந்து கோயிலுக்குள் தண்ணீர் ஒழுகாமல் இருக்க 5.60 லட்சம் செலவில் ஓடுகள் பதிக்கப்படுகிறது. மேலும் ஆராட்டு மண்டபம் கலைநயம் மிக்கதாக கட்டப்படுகிறது. கடற்கரையில் உள்ள பரசுராமர் சன்னிதியில் நுழைவு வாயில் குறுகியதாக உள்ளதால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதில் சிரமம் உள்ளது. அதை மாற்றி விட்டு புதிதாக கோயில் கட்டப்படுகிறது.கோயிலிற்கு உள்ளே உள்ள தூண்களில் படிந்துள்ள தூசிகள் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. கோயில் வெளிப்பிரகாரத்தில் 8.75 லட்சம் செலவில் கருங்கல் தளம் அமைக்கும் பணியும், மதில் சுவரின் வெளிப்பகுதியில் 4.75 லட்சம் ரூபாய் செலவில் நடந்துவரும் அலங்கார நடை பாதை பணிகளும் விரைவுபடுத்தப்படுகிறது.
கோயிலுக்குள் உள்ள எல்லை காத்து நின்ற அய்யனார், சாஸ்தா சன்னிதி, நாகராஜா சன்னிதி போன்றவை மாற்றப்பட்டு வாஸ்துப்படி தெற்கு மூலையில் அமைக்கப்படுகிறது.கோயிலின் மேல் தளத்தில் அம்பாள் விமானம் 35 ஆயிரம் ரூபாய் செலவிலும், பாலசுந்தரி அம்மன் கோயில் விமானம் 25 ஆயிரம் செலவிலும், தியாக சவுந்தரி அம்பாள் விமானம் 25 ஆயிரம் ரூபாய் செலவிலும், கால பைரவர் கோயில் விமானம் 25 ஆயிரம் ரூபாய் செலவிலும் பணிகள் நடந்து வருகிறது.மேலும் கோயிலின் வடக்கு வாசல் வாஸ்துப்படி மாற்றி அமைக்கப்படும். பகவதி அம்மன் மூலஸ்தான விமானம், தியாக சவுந்தரி அம்பாள் விமானங்கள் தங்க முலாம் பூசப்படும், தற்போது 50 லட்சம் ரூபாய் செலவில் நடந்து வரும் திருப்பணிகள் இன்னும் ஒரு ஆண்டில் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.இந்நிலையில் கோயில் தலைமை ஸ்தபதி முத்தையா கோயிலுக்கு வந்திருப்தார். கோயிலை பார்வையிட்டுவிட்டு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலின் வடக்கு வாயிலில் 130 அடி உயரத்தில் ஒன்பது நிலை கொண்ட ராஜகோபுரமும், கிழக்கு வாயிலில் 7 நிலை கொண்ட 90 அடி உயர ராஜகோபுரமும் கட்டப்படும். கிழக்கு பகுதி கடல் காற்று வீசும் பகுதி என்பதால் 30 அடி உயரத்தில் அடித்தளமும், 60 அடி உயரத்தில் ராஜகோபுரமும் கட்டப்படும். இது செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டப்படும். தற்போது ராஜ கோபுரத்திற்கு எஸ்டிமேட் பணிகள் முடிக்கப்பட்டு தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் பணி துவங்கி 3 ஆண்டுகளில் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது இணை ஆணையர் ஞானசேகரன், நெல்லை மண்டல உதவி கோட்ட பொறியாளர் முருகேசன், குமரி மாவட்ட திருக்கோயில் ஸ்தபதி ஆறுமுகம், மராமத்து பொறியாளர் ராஜ்குமார். கோயில் மேலாளர் கோணாசலம் ஆகியோர் உடன் இருந்தனர்.