உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவில் குளத்தில் எச்சரிக்கை பலகை அமைப்பு!

திருத்தணி கோவில் குளத்தில் எச்சரிக்கை பலகை அமைப்பு!

திருத்தணி: திருத்தணி முருகன்  கோவில் சரவணபொய்கை குளத்தின், ஏழு நுழைவு வாயில்களில் பக்தர்களுக்கு  அறிவிப்பு  மற்றும் எச்சரிக்கை  பலகை வைத்து விழிப்புணர்வு  ஏற்படுத்தியுள்ளனர்.

திருத்தணி முருகன் கோவிலின் மலையடிவாரத்தில் உள்ள  சரவணபொய்கை திருக்குளத்தின்  ஏழு நுழைவு வாயில்களும் முன் அறிவிப்பு இன்றி  பூட்டப்பட்டன. இதனால், பக்தர்கள், குளத்தில்  தங்களது நேர்த்திக்கடனை செலுத்த  முடியாமல்  அவதிப்பட்டனர். நமது நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, சரவணபொய்கையின் ஒரு நுழைவு  வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் குளத்திற்கு  அனுமதிக்கப்பட்டனர்.  பக்தர்கள் வழக்கம் போல் காவடிகள் கழுவியும், புனித நீராடியும் பூஜைகள் நடத்தி  வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று, கோவில் நிர்வாகம், சரவணபொய்கை  குளத்தின் ஏழு நுழைவு வாயில்களில், பக்தர்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும்  வகையில், எச்சரிக்கை பலகையும், அறிவிப்பு பலகையும்  அமைத்துள்ளன. எச்சரிக்கை பலகையில், ‘திருக்குளம் ஆழம் அதிகமாக உள்ளதால்   பக்தர்கள் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம். மீறினால்,  ஏற்படும் விளைவுகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு கோவில்  நிர்வாகம் பொறுப்பு  ஏற்காது’ என, கூறப்பட்டுள்ளது. அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளதாவது: திருக்குளம் துாய்மை மற்றும் பக்தர்கள்   பாதுகாப்பு கருதி, அனைத்து வாயிற்கதவுகளும் இரவு நேரங்களில் பூட்டப்படும்.கிழக்குப்புறம் உள்ள வாயிற்கதவு எண் 2 மட்டும், தினசரி காலை,  6:00 மணி முதல்,  மாலை, 6:00 மணி வரையும், கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில், காலை, 6:00  மணி முதல், இரவு, 8:00 மணி வரை, பக்தர்கள்  புனித நீராடுவதற்கு திறந்து  இருக்கும். பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும். குளத்தின் நடுபகுதிக்கு  செல்லாமல், படிக்கட்டு அருகாமையி லேயே நீராட வேண்டும். இவ்வாறு  அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !