திருப்போரூர் கந்தசுவாமி கோவில் அபிஷேக கட்டணங்கள் திடீர் உயர்வு
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், அபிஷேக கட்டணங்கள் உட்பட பல்வேறு கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு, விழா நாட்கள், உற்சவ நாட்கள் மற்றும் பரணி, கிருத்திகை நாட்களில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அபிஷேகம், மொட்டை அடித்தல், துலாபாரம், தங்கரதம் இழுத்தல் போன்ற பிரார்த்தனைகளுக்கான கட்டணங்களை, கோவில் நிர்வாகம், தற்போது திடீரென பன்மடங்கு உயர்த்தி இருப்பது, பக்தர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது.
இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறும்போது, கோவிலுக்கு, வருவாயாக ஆண்டிற்கு, நான்கு கோடி ரூபாய் அளவிற்கு வருகிறது. இப்படியிருக்க, ஏன் கட்டணங்களை உயர்த்தியுள்ளனர் என்பது தெரியவில்லை என்றனர். மேலும் கட்டணங்களை குறைக்கவும் பழைய கட்டணங்களையே தொடரவும், பக்தர்களும், பகுதிவாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கட்டண உயர்வுக்கான அனுமதி கோரப்பட்டிருந்தது. தற்போது தான் கிடைத்தது. அதனால், மாற்றியமைத்துள்ளோம். நற்சோணை செயல் அலுவலர், கந்தசுவாமி கோவில் கோவில் கட்டணங்களை உயர்த்தினால், பணம் படைத்தவர்கள் மட்டுமே, பிரார்த்தனைகளை நிறைவேற்ற முடியும்.பணம் இல்லாதவர்கள் எங்கே போவர். இதெல்லாம் அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம். செந்தில்வேல் சமூக ஆர்வலர், திருப்போரூர்.