ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா: ஜூன் 14ல் நடக்கிறது!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜூன் 14ல் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடக்கிறது.ராமாயணயத்தில், இலங்கையில் இருந்து சீதையை மீட்டு வந்த ஸ்ரீராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதற்கு பரிகாரம் செய்ய ராமேஸ்வரம் கடற்கரை மணலில் சிவலிங்கத்தை உருவாக்கி சீதை பூஜை செய்தார். ஸ்ரீராமர், லெட்சுமணர், அனுமானும் இந்த சிவலிங்கத்தை பூஜித்தனர். ஸ்ரீராமரே சிவனை வேண்டி தரிசித்ததால், இத்திருத்தலம் ராமேஸ்வரம் என பெயர் பெற்றது. ராமாயண வரலாற்றில் தொடர்புடைய இத்திருத்தல வரலாற்றை நினைவு கூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடைபெறும். இந்தாண்டு ஜூன் 12ல் விழா துவங்குகிறது. அன்று, ஸ்ரீராமர், ராவணனை வதம் செய்தல், ஜூன் 13ல் தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீராமர், ராவணன் தம்பி விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி, ஜூன் 14ல் ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது.
கோயில் நடை சாத்தல்: ஜூன் 13ல் விபீஷணர் பட்டாபிஷேகத்தையொட்டி, அன்று அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடை திறந்து, காலை 4 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். பின் காலை 7 மணிக்கு ஸ்ரீராமர் புறப்பாடாகியதும் கோயில் நடை சாத்தப்படும். பின், மாலை 4 மணிக்கு ஸ்ரீராமர், பஞ்சமூர்த்திகளுடன் கோயிலுக்குள் திரும்பியதும் நடை திறந்து, வழக்கம் போல் பூஜை நடக்கும் என, கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.