உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்ய சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்!

சத்ய சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்!

துடியலூர்:கோவை மாவட்டம், கணுவாய் அருகே, திருவள்ளுவர் நகரில், சத்ய சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கோவை தடாகம் ரோட்டில் கணுவாய் அருகே, திருவள்ளுவர் நகர் உள்ளது. இங்கு கடந்த 2004ல் சிரடி சாய்பாபா கோவில் எழுப்பப்பட்டது. இக்கோவிலுக்கு, இருபுறமும் விநாயகர், லட்சுமி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவில்கள் அனைத்தும், வடக்கு பக்கம் நோக்கி கட்டப்பட்டுள்ளன. இக்கோவிலுக்கு அருகே, தேங்காய் மட்டையுடன் முழுத் தேங்காயை எரிக்க, யாக குண்டம் என்ற தூணி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே நவக்கிரக மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஏப்., 24ம் தேதி, ஜீவன்முக்தியடைந்த, சத்ய சாய்பாபாவுக்காக, இந்த கோவில் வளாகத்தில், தூணி அருகே மேற்கு பக்கம் நோக்கி, கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இதில், மூன்றே முக்கால் அடி உயரத்தில், அமர்ந்த நிலையில், பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் அமைப்பில், சத்ய சாய்பாபாவின், மார்பிள் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது, ராஜஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்டது. கோவையில் முதன் முதலாக, சத்ய சாய்பாபாவுக்காக அமைக்கப்பட்டுள்ள கோவில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கும்பாபிஷேக நிகழ்ச்சியையொட்டி,நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் நடந்தன. இரவு சதுர்வேத பாராயணம் நடந்தது. நேற்று காலை 5.30 மணிக்கு கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை, ஹோமம் நடந்தது.மகா கும்பாபிஷேகத்தை, மணிகண்ட சர்மா சாஸ்திரிகள் நடத்தினார். விழாவையொட்டி, மகா அபிஷேகம், தீபாராதனை, பஜனை நடந்தது. மாலையில் சாய்கிருபா குழுவினரின், சத்ய சாய் பஜன், கோவை ஸ்ரீ ஜெயராம் பாகவதர் குழுவினரின் சாய் பஜன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !