உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமானுஜர் திருநட்சத்திர ஊர்வலத்திற்கு தடை!

ராமானுஜர் திருநட்சத்திர ஊர்வலத்திற்கு தடை!

திருக்கோவிலுார்: ராமானுஜர் ஆயிரமாவது திருநட்சத்திர ஊர்வலத்திற்கு போலீசார் தடை விதித்ததற்கு, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த தேவனுார் ராமானுஜர் மலையில் ராமானுஜர் கோவில்  அமைந்துள்ளது. இங்கு, ராமானுஜரின் திருநட்சத்திரமான நேற்று, ஆயிரமாவது திருநட்சத்திர விழா கமிட்டி சார்பில், சிறப்பு வழிபாடு நடந்தது.

அதனையொட்டி, காலை, ராமானுஜருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலர் செஞ்சி ராஜா‚ விவசாய அணி செயலர் நாகப்பன்‚ திருக்குலத்தார் மாநிலத் தலைவர் விஜயராஜூ‚ கோவில் நிர்வாகி சரவணன்‚ மாவட்ட பொதுச்செயலர் மணி உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வழிபாட்டிற்கு தலைமை தாங்கிய இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது: ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திர விழா கமிட்டி சார்பில்‚ அவரது கோவிலில், ஒவ்வொரு மாதமும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. இன்று(நேற்று) தேவனுாரில் இருந்து, ஊர்வலமாகச் சென்று வழிபாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதற்கு போலீசார் தடைவிதித்து விட்டனர். இது, கண்டிக்கத்தக்கது. இது, இந்துசமய அறநிலையத்துறையும்‚ மத்திய அரசும் கொண்டாட வேண்டிய விழா. தமிழ்‚ வைணவம் இந்தியா முழுக்க ஒலிக்கச் செய்த இந்த மகானின் பிறந்தநாள் விழாவை தேசிய விழாவாக கொண்டாட வேண்டும். ராமானுஜரின் நினைவிடமாக இருக்கும் ஸ்ரீ ரங்கம்‚ ஸ்ரீ பெரும்புதுார்‚ மேல்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஆண்டுதோறும் அரசு விழா எடுக்க வேண்டும். மதம் மாறுபவர்களுக்கு இடஒதுக்கீட்டில் சலுகை வழங்கக்கூடாது. அம்பேத்கரின் 125வது பிறந்த நாள்‚ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு அடுத்த மாதம் டில்லியில் பேரணி நடத்த உள்ளோம். இவ்வாறு, அர்ஜூன் சம்பத் கூறினார். அரகண்டநல்லுார் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !