ரமலான் சிந்தனைகள்-2: நறுமணம் மிக்க காற்று
நோன்பு பொறுமையில் பாதி, பொறுமை இறை நம்பிக்கையில் பாதி,” என்கிறார் நபிகள் நாயகம். இஸ்லாமின் பல துாண்களில் நோன்பு தனித்துவம் பெறுகிறது. ஏனெனில் நோன்புக்கும், இறைவனுக்கும் தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது. இதை நபிகள் நாயகம் மூலமாக இறைவனே கூறுகிறான்.“நோன்பைத் தவிர்த்து மற்ற நற்செயல்கள் ஒவ்வொன்றும் பத்திலிருந்து எழுபது மடங்கு கூலி பெறும். ஆனால் நோன்பு எனக்காக நோற்கப்படுகிறது. அதற்குக் கூலி நானே கொடுப்பேன்,” என்கிறான். மற்ற நற்செயல்களுக்கு அளவீடு இருக்கிறது. இறைவனே கூலி தருகிறான் என்றால், அதன் அளவை எதைக்கொண்டு மதிப்பிட முடியும்! எனவே இறைவனின் கட்டளையை ஏற்று நற்சிந்தனைகளுடன் நோன்பிருப்பவர் அடையும் பலனுக்கு அளவுகோல் இல்லை. வாயைத் திறந்தால் கெட்ட நாற்றமுள்ள காற்று வரலாம். ஆனால் நோன்பாளிக்கு இதிலிருந்து விதி விலக்கு தரப்பட்டிருக்கிறது. “எவன் கையில் என் உயிர் உள்ளதோ, அவன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் காற்றானது, அல்லாஹ்வின் முன் நறுமணமுள்ள கஸ்துாரியை விட அதிக வாசனையுள்ளதாகவும், அல்லாஹ்வுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகவும் இருக்கும்,” என்கிறார் அண்ணலார்.இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.15 மணி