கும்பாபிஷேகத்துக்கு காத்திருக்கும் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், 32 லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழாவுக்கு காத்திருக்கிறது. வாழப்பாடி அடுத்த பேளூரில், வசிஷ்டநதிக்கரையில் பஞ்ச பூத திருத்தலங்களில் முதல் தலமான தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 2,000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், 2002ம் ஆண்டு, ராஜகோபுரம் அமைத்து மிக நேர்த்தியாக புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆகமவிதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் செய்து கோவில்களுக்கு கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும் என்பது ஐதீகம். இதையடுத்து, தான்தோன்றீஸ்வரன் கோவிலை பராமரித்து கும்பாபிஷேக விழாவை நடத்திட, 13வது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ், கடந்தாண்டு தமிழக அரசு, 32 லட்சம் ரூபாய் நிதி வழங்கியது. ஓராண்டாக நடந்த கோவில் பராமரிப்பு பணி கடந்த பிப்ரவரி மாதம் முடிவுக்கு வந்தது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், விழா நடத்துவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்து, நான்கு மாதங்கள் கடந்தும் விழா நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா விரைந்து நடத்திட இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்களும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.