மாங்கனி திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்: களைகட்டுகிறது காரைக்கால் நகரம்!
காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், காரைக்கால் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில், அம்மையாரின் வாழ்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது. திருவிழாவில், மாப்பிள்ளை அழைப்பு, அம்மையார் திருக்கல்யாணம், சிவனடியார் வேடத்தில் சிவபெருமான் வருகை, சிவபெருமானுக்கு அமுது படையல், கணவர் பிரிந்து செல்லுதல், அம்மையார் சிவபெருமானிடம் ஐக்கியமாகும் உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான விழா மே 2ம் தேதி பந்தக்கால் முகூர்த்ததுடன் துவங்கியது. நாளை 17ம் தேதி பரமதத்தர் மாப்பிள்ளை அழைப்பு நடக்கிறது. 18ம் தேதி காரைக்கால் அம்மையார் - பரம தத்தர் திருக்கல்யாண உற்சவம், பிஷாடண மூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நடக்கிறது.
வரும் 19ம் தேதி சிவபெருமான் வெட்டிவேர் மாலையுடன் அடியார் வேடத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது, தங்களது வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் வீடுகளின் மாடியில் இருந்து மாங்கனியை வீசும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை அடியார் வேடத்தில் வந்த சிவபெருமானுக்கு அம்மையார் அமுது படைக்கும் வைபவம் நடக்கிறது. பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழாவில் காரைக்கால், நாகப்பட்டினம், புதுச்சேரி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ௫௦ ஆயிரம் பக்தர்கள் வரை பங்கேற்பர். இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாங்கனி திருவிழா வருவதால் வெளியூர் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கேசவன் தலைமை தாங்கினார். கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். பொதுப்பணித் துறை, நகராட்சி, மின்துறை, சுகாதாரத் துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் சமாதான கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாங்கனி திருவிழாவிற்காக, சுவாமி வீதி உலா செல்லும் தெருக்களை நகராட்சி நிர்வாகம் சுத்தமாக பராமரிக்க வேண்டும். சுவாமி செல்லும் சாலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும். போக்குவரத்து துறையினர் தமிழக பகுதியில் இருந்து காரைக்காலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவாமி வீதியுலா செல்லும் பாரதியார் சாலை, மாதா கோவில் வீதிகள் உள்ளிட்ட சாலைகளை புனரமைக்க வேண்டும். தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் அகற்றப்பட வேண்டும். மாங்கனி வீசும் போது கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. -நமது நிருபர்-