திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்ம பிரம்மோற்சவம் துவக்கம்!
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள, நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. நுாற்றி எட்டு திவ்ய தேசங்களின் ஒன்றாக விளங்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், யோக நரசிம்மர் பெருமாளுக்கு இந்தாண்டிற்கான பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று , 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் துவஜாரோஹணம் எனும் கொடியேற்ற விழா நடைபெற்றது. விழாவில் ஸ்ரீதேவி, பூ தேவியுடன் நரசிம்மர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வரும், 17ம் தேதி காலை, 5:30 மணிக்கு கோபுரவாசல் தரிசனத்துடன் கருடசேவை நடக்கிறது. வரும், 19ம் தேதி நாச்சியார் திருக்கோலமும், அனுமந்த வாகன புறப்பாடும் நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான, வரும், 21ம் தேதி காலை, 7:00 மணிக்கு தேர்த்திருவிழா நடக்கிறது. உற்சவர் தெள்ளிய சிங்கர், பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் திரு த்தேரில் எழுந்தருளி, மாடவீதிகளை வலம் வந்து அருள் பாலிக்கவுள்ளார். வரும், 23ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், 25 முதல் 27ம் தேதி வரை விடையாற்றி உற்சவமும் நடக்கின்றன.