கள்ளக்குறிச்சி கணபதி கோவில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏ.கே.டி., கல்வி நிறுவனங்கள் சார்பில் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வித்யா கணபதி கோவில் திருப்பணி செய்யப்பட்டு, 2வது முறையாக கும்பாபிஷேக விழா இரண்டு நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை கணபதி யாகத்துடன் பூர்வாங்க பூஜைகள் துவக்கப்பட்டு, யாகங்கள் நடந்தது. நேற்று காலை பசுபூஜை, நாடி சந்தானம், யாத்ரா தானம் ஆகியவை நடந்தது. பின், கோபுரத்திற்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மூலவர் வித்யா கணபதி பரிவாரங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணுதுர்கை தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லஷ்மிபிரியா, ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். வெங்கடசுப்ரமணிய சர்மா குழுவினர் கும்பாபிஷேக வைபவத்தை செய்து வைத்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.