ஏகாம்பரநாதர் கோவில் வைர கற்கள் ஒரிஜினல் தானா? பக்தர்கள் கேள்வி!
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவிலில், மாயமான கந்தர் சிலைக்கு பதில் வேறு சிலை வைக்கப்பட்டுள்ளது போல, கோவிலின் விலை மதிக்க முடியாத ஆபரணங்களில் இருந்த வைரம், மாணிக்கக் கற்கள் அகற்றப்பட்டு, சாதாரண கற்கள் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள, 1,000 ஆண்டுகள் பழமையான உற்சவர் சிலை பழுதடைந்துள்ளதாக கூறி, அதை மாற்றி, புதிய சிலை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு புதிய சிலை செய்தால், பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என, பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், திருடு போன கந்தர் சிலை இன்னும் கிடைக்காத நிலையில், அதற்கு முன்,1992ம் ஆண்டு பள்ளியறை சுவாமி சிலை திருடுபோனது. அதற்கு பதில், புதிய சிலை, உபயதாரர் மூலம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல், சுவாமி அணியும் விலை உயர்ந்த வைரம் மற்றும் மாணிக்க கற்கள் சில காணாமல் போய் உள்ளன. அதற்கு பதில், போலி கற்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து, நேற்று நடந்த, மக்கள் குறை தீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியிடம் அண்ணாமலை என்பவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து சமய அறநிலையத்துறை, முன்னுக்கு பின் முரணான தகவல்களை தருகிறது. தகவல் கேட்பவர்களும் மிரட்டப்படுகின்றனர். பள்ளியறை சிலை திருடு போயுள்ளது. அதுவும் போலி சிலை என, கூறப்படுகிறது. இந்த சிலைக்கு மன்னர் காலங்களில் செய்யப்பட்ட நகைகளில் உள்ள விலைமதிப்பில்லாத மாணிக்கம், வைர கற்கள், சிரசு சக்கரம் மற்றும் திருவாச்சி ஆகியவை காணாமல் போயிருப்பது, உற்சவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும் போது தெரிகிறது. நகைகளையும் ஆய்வு செய்து, திருடு போன சிலைகளையும், நகைகளையும் கண்டுபிடிக்க, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.