உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழைவேண்டி சிறப்பு பூஜை

மழைவேண்டி சிறப்பு பூஜை

ஆண்டிபட்டி: வைகை அணை நீர் தேக்கப்பகுதியில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் வழிபாட்டு மன்றங்கள் சார்பில் மழை வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. கடந்த ஆண்டு போதிய மழையில்லாததால் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிப்படைந்தது. இந்த ஆண்டு கோடை மழை எதிர்பார்த்த அளவு இல்லை. ஜூன் மாதம் மூன்றாவது வாரம் வந்துவிட்ட நிலையில் , மாவட்டம் மற்றும் வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழைக்கான அறிகுறிகள் இல்லை. பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழையில்லாததால் அங்கிருந்து வைகை அணைக்கு நீர் வரத்து இல்லை. இதனிடையே வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழைபெய்து, அணை நிரம்ப வேண்டி மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் அணை நீர் தேக்கப்பகுதியில் சிறப்பு பூஜை நடந்தது. மதுரை மாவட்ட தலைவர் அசோகன், இடுக்கி மாவட்ட தலைவர் சதீஷ்குமார், தேனி மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தனர். குரு கலசம், பஞ்சபூதம், நவகிரகம், கலசவிளக்கு, பிரதான யாகசாலை, விநாயகர் ஆகியவற்றிற்கு யாக பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் புனித நீர் மற்றும் பூஜைப்பொருட்களுடன் வைகை அணை நீர் தேக்கத்தில் பூஜை செய்தனர். மதுரை, தேனி இடுக்கி மாவட்டங்களைச்சேர்ந்த ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற உறுப்பினர்கள் பலர் வேள்வி பூஜையில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !