மாமல்லபுரம் சுற்றுலா சாலையில் ஆக்கிரமித்த கோவில் அகற்றம்
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஆக்கிரமிப்பு கட்டுமானத்தை, பேரூராட்சி ஊழியர்கள் இடிக்க முயன்றபோது, பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்; எனினும், கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள், அதை அகற்றினர்.மாமல்லபுரம், ஐந்து ரத வீதி, சுற்றுலா பகுதி முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலை நான்கு வழித்தடமாக, 10 ஆண்டுகளுக்கு முன் அகலப்படுத்தப்பட்டு, நடைபாதையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், சாலையின் ஒருபுறம், நடைபாதையில் சிற்பக்கூட சிலைகள் வைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சாலையின் மறுபுறம், அரசியல் கட்சிகளின் கொடி கம்பம், அய்யப்ப சுவாமி சன்னிதி என, நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன், நடைபாதையை ஆக்கிரமித்து, தனியார் ஒருவர் கோவில் அமைக்க முயன்ற போது, பேரூராட்சி நிர்வாகம் தடுத்தது.இதற்கிடையே, அரசு விடுமுறை நாளான நேற்று முன்தினம், அதிகாரிகள் இல்லாத நிலையில், கோவில் கட்டினர். இதையறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் மற்றும் ஊழியர்கள், நேற்று காலை 10:25 மணிக்கு, ஆக்கிரமிப்பு கட்டுமானத்தை, ஜே.சி.பி., மூலம் இடிக்க முயன்றனர். அங்குள்ளவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமையில், அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை இடித்தனர்.