உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்சி பொருளாக மட்டுமே விளங்கும் மாமல்லபுரம்!

காட்சி பொருளாக மட்டுமே விளங்கும் மாமல்லபுரம்!

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களில், சரித்திர விளக்க குறிப்பு இன்றி, சுற்றுலா பயணிகள் வெறுமனே கண்டு  களிக்கின்றனர்.  இதனால், அந்த முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பெருமை, சுற்றுலா பயணிகளுக்கு தெரியாத நிலை  காணப்படுகிறது. பல்லவ பாரம்பரிய சி ற்பக்கலைக்கு புகழ்பெற்றது மாமல்லபுரம். சர்வதேச அளவில், வெவ்வேறு வகை பாரம்பரிய  சிற்பங்கள், ஓரிடத்தில் இடம்பெற்ற பகுதியாக,  மாமல்லபுரம் விளங்குகிறது.

கடற்கரை கோவில்: இக்கோவில், பிற பகுதி பாறைகளில் வெட்டிய கற்களால் அமைக்கப்பட்ட கட்டுமான வகையைச் சேர்ந்தது; சைவ,  வைணவ  என, இரு கருவறைகள் கொண்டுள்ளது; தற்போது வழிபாட்டில் இல்லை.

ஐந்து ரதங்கள்: ஒரே பாறையில், தனித்தனி ரதங்கள், கட்டுமான கோவில் அமைப்பில் செதுக்கப்பட்ட வகையைச் சேர்ந்தது. வடக்கு,  தெற்காக நீ ண்டுள்ள பாறைக்குன்றில், வெவ்வேறு வடிவில், மேற்கூரை அமைப்பில் என, தர்மராஜ ரதம், பீம ரதம், சகாதேவ ரதம்,  அர்ச்சுனன் ரதம், திரவுபதி  ரதம் ஆகியவை, கடவுள் சிற்பங்கள், யானை, சிங்கம், நந்தி என, வேலைப்பாட்டுடன் உள்ளது.

அர்ச்சுனன் தபசு: இது, பாறை விளிம்பில் புடைக்கப்பட்ட வகையைச் சேர்ந்தது. வடக்கு, தெற்காக, நீண்டும், உயர்ந்தும் உள்ள  பாறைக்குன்றின்  கிழக்கு விளிம்பில், நிலமட்டத்தின் கீழும், மேலுமாக, இச்சிற்பம் புடைக்கப்பட்டுள்ளது. சிவபெருமான், தேவர்கள்,  பக்தர்கள், சித்தர்கள்,  முனிவர்கள், வனம், அதன் உயிரினங்கள், நாகங்கள், பாயும் கங்கை நதி என, சிற்ப தொகுதியாக உள்ளது. தவம்  செய்வது சிவபெருமானா,  பகீரதனா என, இரு வேறு கருத்து நிலவுகிறது.

குடைவரை மண்டபங்கள்: பாறைக்குன்றின் உட்புறம் குடையப்பட்டு உருவான வகையைச் சேர்ந்தவை. திருமூர்த்தி, கிருஷ்ணர்,  தர்மராஜர்,  ராமானுஜர், வராகர், மகிஷாசுரமர்த்தினி, கோடிக்கல், பஞ்சபாண்டவர் உறங்குமிடம், கோனேரி ஆகிய பெயர்களில், சரித்திர,  புராண சிறப் புகளுடன், குடைவரை மண்டபங்கள் உள்ளன. இது மட்டுமின்றி, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்டவை என, 32  சின்னங்களுடன், சிற்ப  அருங்காட்சியகமாக விளங்குகிறது. இந்திய தொல்லியல்துறை பராமரித்து, பாதுகாத்து வருகிறது. இத்தகைய  பழங்கால கலைப்படைப்புகளை  காண, உள்நாடு மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து, சுற்றுலா வருகின்றனர். இந்நிலையில்,  கடற்கரைகோவில், ஐந்து ரதங்கள் ஆகிய சின்னங்களில்  மட்டுமே, அவற்றின் சரித்திர விளக்க குறிப்பை, இத்துறை வைத்துள்ளது. பிற  சின்னங்களில், விளக்க குறிப்பு இல்லை. ‘தேசிய பாதுகாக்கப்பட்ட  சின்னம்; அவற்றை சேதப்படுத்தக் கூடாது’ என, அறிவிப்பு பலகையை  மட்டுமே வைத்துள்ளது.

சுற்றுலா பயணிகள், கலைச்சின்னங்களின் சிறப்பை அறிய இயலாமல், வெறுமனே பொழுதுபோக்காக காண்கின்றனர்.  கலைச்சின்னங்களில்,  ஒவ்வொன்றின் சிறப்பு, சிற்ப கருத்து விளக்கம், அமைப்பு வகை, உருவான காலம் என, விளக்க குறிப்புகள்  இருந்தால், பாரம்பரிய, சரித்திர  தகவல்களுடன் கண்டு மகிழலாம் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !