பழநிகோயிலில் கார்த்திகைப் பெருவிழா
பழநி,:பழநிகோயிலில் திருமுருக பக்தசபா சார்பில் கார்த்திகைப் பெருவிழா நடந்தது. திருஆவினன்குடிகோயிலில் பகல் 12 மணிக்கு குழந்தை வேலாயுதசுவாமி, சனிபகவான், தெட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பழநிமலைக்கோயில் ஞானதண்டாயுத பாணிசுவாமிக்கு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டது. பகல் 2 மணிக்குமேல் பக்தி இன்னிசை, சொற்பொழிவுகள் நடந்தது. மாலை 6மணிக்கு 108 திருவிளக்கு பூஜையில் பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கபட்டது. ஏற்பாடுகளை திருமுருகபக்தசபா நிர்வாகிகள் உபயதாரர்கள் செய்தனர். இரவு 7மணிக்குமேல் பெரியநாயகியம்மன்கோயிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் நான்குரதவீதியில் உலாவந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருமலைக்கேணி: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், திருமஞ்சணம், தயிர், தேன், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு 16 வகை அபிஷேகங்களுடன் ஆராதனை நடந்தது. தொடர்ந்து விளக்கு பூஜை, பஜன் நடந்தன. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.