வத்திராயிருப்பில் பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் பிரசித்தி பெற்ற சேதுநாராயணப்பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா ஜூலை(15) கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இக்கோயிலில் பாரம்பரியமாக இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையொட்டி கோயில் மைய மண்டபத்தில் தினமும் சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேகத்துடன் திருமஞ்சன வழிபாடும், மாலையில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
நிகழ்ச்சியின் 5ம் நாளில் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 6ம் நாளில் தேரோட்டமும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா ஜூலை(15)காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கருடக் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களின் தரிசனத்திற்காக கொடி மங்களவாத்தியங்களுடன் வீதியுலாவாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கோயில் கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கருடக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து ஆண்டாள் அலங்காரப்பந்தலில் சுவாமிக்கும், தாயார்களுக்கும் சிறப்பு திருமஞ்சன வழிபாடும், மாலையில் சுவாமி சேஷவாகன வீதியுலாவும், அலங்காரம் ராஜகோபால் ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் சேவா சமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.