உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி பக்தர்கள் யாக பூஜை!

மழை வேண்டி பக்தர்கள் யாக பூஜை!

பவானிசாகர்: பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்ய வேண்டி, விவசாயிகள் மற்றும் மக்கள், நேற்று யாகம் நடத்தியதுடன், 1,008 தீர்த்தக்குடம் நீர் ஊற்றி, விநாயகரை வழிபட்டனர்.  ஈரோடு மாவட்டத்தின், முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையே, அணைக்கு பிரதான நீர் வரத்தாகும். அணையால், இரண்டு லட்சத்து, 7,௦௦௦ ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்தது. இதனால் கடந்த ஜூலையில், அணை நீர்மட்டம், 85.56 அடியாக இருந்தது. தற்போது, நீலகிரி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும், 58 அடியாகவே உள்ளது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்தால் மட்டுமே, நீர்மட்டம் உயர்ந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் சூழ்நிலை ஏற்படும்.  இந்நிலையில், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கம், முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வேண்டி, அணையின் மேல் பகுதியில் உள்ள, சாகர் சக்தி விநாயகர் கோவிலில், நேற்று காலை யாக பூஜை நடந்தது. அதை தொடர்ந்து, விவசாயிகள், மக்கள் என, 400க்கும் மேற்பட்டோர் அணை நீர்த்தேக்கப்பகுதியில், 1,008 குடம் தண்ணீர் எடுத்து வந்து, விநாயருக்கு ஊற்றி வழிபாடு நடத்தினர். பூஜையில் அமைச்சர் கருப்பணன், எம்.பி.சத்தியபாமா, எம்.எல்.ஏ.,க்கள் செங்கோட்டையன், ராஜா கிருஷ்ணன், ஈஸ்வரன் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !