பழமையான அகஸ்தீஸ்வர் கோவில் சிதிலமடைந்து கிடப்பதால் வேதனை!
கரூர்: கரூர் அருகே, பழமையான அகஸ்தீஸ்வர் சிவன் கோவில் சிதிலமடைந்து கிடக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட துறையினர் கண்டு கொள்ளாததால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். கரூர் மாவட்டம், சோமூர் அடுத்த திருமுக்கூடலூரில், புராதன சிற்பங்களுடன் அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. காவிரி, அமராவதி, மணிமுத்தாறு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில், அமராவதி ஆற்றங்கரையோரம், 1,500 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலில், அகஸ்தீஸ்வரர், அஞ்சநாச்சியம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். பிரம்மா, விஷ்ணு சுவாமிகளுக்கு, தனித்தனியே சன்னதி உள்ளது. இதுமட்டுமல்லாமல், சந்திரன், சூரியன், அகோரவீரபத்திரர், முருகன் வள்ளி, தெய்வானை என்று சிவ தலங்களுக்கு உரிய, அனைத்து சுவாமிகளும் அருள்பாலித்து வருகின்றனர்.
இதுகுறித்து, திருமுக்கூடலூர் பெண்கள் பத்மாவதி, கோமதி ஆகியோர் கூறியதாவது: மூன்று ஆறுகள் ஒன்றும் சேரும் திருமுக்கூடலூரில், லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்ய அகஸ்தியரும், வாலியும் முடிவு செய்தனர். ஆனால், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், அமராவதி ஆற்றில் இருந்த மணலை எடுத்து, லிங்க வடிவில் உருவாக்கி, அகஸ்தியர் வைத்து பிரதிஷ்டை செய்து விட்டார். அதே நேரத்தில், காசியில் இருந்து வாலி கொண்டு வந்த லிங்கம், அயலூரில் தற்போது, வாலீஸ்வரர், சவுந்தரநாயகி என்று பெயர்பெற்று விளங்குகிறது. இந்த வரலாறுகள் அனைத்தும், அந்த கோவிலில் உள்ள ஒவ்வோரு துண்களிலும் சிற்பங்களாக காட்சியளிக்கிறது. மன்னர்கள் காலத்தில் வெள்ளை, சிகப்பு, கறுப்பு கற்கள் வைத்து, இந்தக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
கடந்த, 1977ல் அமராவதி ஆற்றில் ஏற்றப்பட்ட வெள்ளத்தால் அகஸ்தீஸ்வரர் கோவில் முற்றிலும் மணலால் மூடிவிட்டது. காலப்போக்கில், புராதன கோவில் என்பதால், அக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அகஸ்தீஸ்வரால் அமைக்கப்பட்ட கோவிலில், தற்போது அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள சுவர் இடிந்தும் மற்ற பகுதியில் உள்ள மதில் சுவர்கள் பராமரிப்பு இல்லாததால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், அந்தக் கோவிலில் உள்ள மணல் லிங்கத்துக்கு இன்று வரை பாலபிஷேகம் மட்டுமே நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
புனரமைக்க அரசின் நிதி எதிர்பார்ப்பு! பழங்கால கோவிலை புனரமைக்க தொல்லியல் துறை அனுமதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்கள் வந்து பார்வையிட்டு, இந்தக் கோவிலை புனரமைக்க, எவ்வளவு செலவாகும் என்பதை நிர்ணயிப்பர். அதன் பின் அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். அவர்கள் ஒதுக்கும் நிதி மற்றும் உபயதாரர்கள் உதவியுடன் மீண்டும், அகத்தீஸ்வரர் கோவில் பொலிவாக விளங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒருகால பூஜை மட்டும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. - ரத்தினவேல்பாண்டியன், இணை கமிஷனர், இந்துசமய அறநிலையத்துறை.