கன்னிமார் கோயிலில் மழை வேண்டி மழைக்கஞ்சி திருவிழா!
ADDED :3402 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி நக்கலக்கரடு அடிவாரத்தில் உள்ள கன்னிமார் அம்மன் கோயிலில் மழை வேண்டி மழைக்கஞ்சி திருவிழா நடந்தது. விழாவில் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்தனர். சப்த கன்னியர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கூழ் காய்ச்சி படையல் செய்தனர். ஐந்து முதல் ஒன்பது வயதிற்குட்பட்ட ஏழு பெண் குழந்தைகளுக்கு பாத பூஜை செய்தனர். பின்னர் அம்மனுக்கு படைக்கப்பட்ட பழவகைகளை அந்த குழந்தைகளுக்கு கொடுத்தனர். கர்ப்பிணிப்பெண்கள் சுகப்பிரசவம் வேண்டியும், திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டியும் அம்மனை வழிபட்டு சென்றனர். கடந்த பல ஆண்டுகளாக ஆடி மாதம் முதல் சனிக்கிழமை நடந்து வரும் விழாவில் பக்தர்கள் பலரும் விரதம் இருந்து மழைவேண்டி பிரார்த்தனை செய்து வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.