பழந்தமிழர்களின் பொக்கிஷம் திருமலை!
சிவகங்கை: இரண்டாயிரத்து இருநுாறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள், சமணர் குகை, 8 ம் நுாற்றாண்டு முற்காலப் பாண்டியர் குடைவரைக் கோயில், 13 ம் நுாற்றாண்டு பிற்கால பாண்டியர் கட்டுமான கோயில் ஒருங்கே அமையப் பெற்ற இடம் தான் திருமலை. இந்த குன்று சிவகங்கையில் இருந்து 15 கி.மீ., ல் உள்ளது. இங்கு பாறையை குடைந்து கட்டப்பட்ட குடைவரைக் கோயியிலில் சிவன், மீனாட்சி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றனர். அருகே சுப்ரமணியர் சுவாமி குறவர் வேடத்தில் சேவற்கொடியுடன் பாசி மாலையணிந்துள்ளார். இந்த கோயில் 8 ம் நுாற்றாண்டில் முற்கால பாண்டியர்களால் உருவாக்கப்பட்டது.
குகைக் கோயிலுக்கு வெளியே 13 ம் நுாற்றாண்டில் பிற்கால பாண்டியர்களால் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. அதில் பாகம்பிரியான் அம்மனுடன் மலைக்கொழுந்தீஸ்வரர் லிங்க வடிமாக காட்சியளிக்கிறார். கோபுரம் பின்புறம் விநாயகர் சடைமுடியுடன் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. வலதுபுறத்தில் சுப்ரமணியர் சுவாமி ஆறுமுகத்துடன் உள்ளார். சனீஸ்வரர் காகத்தின் மீது தன் காலை வைத்திருப்பது போன்ற அரிய காட்சியும், தோன்றிய காலத்தில் கோயிலை காத்த கருவவீரபாண்டியனுக்கு சிலையும் உள்ளன. காலபைரவர் தனது வலது கையில் அனுமன் போல் கதாயுதம் வைத்துள்ளது பிரமிக்க வைக்கிறது. கோயிலை சுற்றி கிரிவலம் செல்ல 2 கி.மீ., சுற்றளவில் சாலை உள்ளது. கோயிலை சுற்றி 8 சுனைகள் உள்ளன. மேற்புறம் உள்ள பெரிய சுனையில் விநாயகர் உருவம் பொறித்த கல் நீருக்குள் கிடக்கிறது. சுனைநீர் வற்றி சிலையின் தலைப்பகுதி தெரிந்தால் மழை பெய்யும் என்கின்றனர் இப்பகுதி மக்கள். மேலும் நோயால் பாதித்த உறுப்பை பாறை மீது பொறித்தால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால் பாறை முழுதும் ஆங்காங்கே உடல் உறுப்புகள் வரையப்பட்டுள்ளன.
பாறையின் தெற்கு பகுதி அகத்திய முனிவர் வாழ்ந்த இடமாக கூறப்படுகிறது. அப்பகுதியில் அகல்விளக்கு போன்று பாறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியரின் ஓம் என்று சொல் இன்றும் ஒலிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கோயிலுக்கு வடபுறம் உள்ள தாமரைக்குளம் காசிக்கு நிகராக ஒப்பிடப்படுகிறது.
சமணர் படுக்கைகள்: கோயிலுக்கு மேற்புறத்தில் பெரிய பாறைகளின் இணைவில் வடக்கு நோக்கி இரு குகைகள் உள்ளன. அடித்தளத்தில் சமணர்களின் படுக்கைகள் காணப்படுகின்றன. அதனருகே பாண்டவர் படுக்கை, ராமர் சீதை படுக்கை உள்ளன. இந்த பாறைகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. படுக்கைகள் மிகவும் நேர்த்தியாக உருவாக்கியுள்ளனர். இவை சமதளமாக இல்லாமல் தலை பகுதி உயரமாகவும், கால் நீட்டும் பகுதி ஒரே சீராக இறக்கமாகவும் உள்ளன. படுக்கைகளை சுற்றி சிறிய வாய்க்கால் போன்று பாறையில் செதுக்கியுள்ளனர். இவை மழைநீரை படுக்கைக்கு வருவதை தடுக்கும். மேலும் மேற்புறத்தில் இருந்து தண்ணீர் சொட்டு, சொட்டாக விழாமல் இருக்க பாறை விளிம்புகளில் கொடுங்கை போன்று வெட்டியுள்ளனர். இந்த படுக்கைகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது. படுக்கைக்கு மேற்புற பாறையில் சுவஸ்திக் முத்திரை செதுக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை.
பாறை ஓவியம்: பாறை ஓவியங்களும் ஏராளமாக காணப்படுகின்றன. இரு ஆடவர்கள் சண்டையிடுவது, பறவைகள் போன்ற வேடமணிந்த மனிதர்கள், தமறு என்ற இசை வாத்தியத்தை வாசிப்பது, கையில் கம்புடன் குதிரை ஓட்டுவது போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. அவற்றை இரு விதமாக வரைந்துள்ளனர். ஒன்றில் முழுமையாக வண்ணம் தீட்டாமல் உருவங்களை மட்டும் மெல்லிய கோடுகளால் வரைந்துள்ளனர். மற்றொன்றில் உருவங்களை வண்ணத்தால் அழகுற முழுமையாக தீட்டியுள்ளனர். சில ஓவியங்களில் இருமுறைகளும் கையாளப்பட்டுள்ளன.
பிராமிக் கல்வெட்டுகள்: சமணர் படுக்கைகளுக்கு அருகே மற்றொரு குகை நெற்றியில் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த கல்வெட்டுகள் தங்களுக்கு படுக்கை அமைத்து கொடுத்தவர்களுக்கு நன்றி கடனாய் சமணர்கள் வெட்டுவித்ததாக கூறப்படுகிறது. பஞ்சபாண்டவர் படுக்கை பகுதியில் 2 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகள் கி.மு., 3 நுாற்றாண்டைச் சேர்ந்தவை.
பாதுகாக்க வேண்டும்: ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது: திருமலையில் முற்காலபாண்டியரின் குடைவரைக் கோயில், பாறை ஓவியம், சமணர் படுக்கைகள், பிராமிக் கல்வெட்டுகள் போன்றவை வேறு எங்கும் ஒரே இடத்தில் அமையவில்லை. ஆனால் அவற்றை பாதுகாக்காமல் சமூகவிரோதிகள் சேதப்படுத்தி வருகின்றனர். அப்பகுதி இளைஞர்கள் அவற்றை பாதுகாக்க முயற்சி செய்து வருகின்றனர். அரசும் பழங்கால தமிழர்களின் பொக்கிஷங்களை பாதுகாக்க முன் வர வேண்டும், என்றார்.