உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கனகநாச்சியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா

கனகநாச்சியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா

வேலுார்: தமிழகத்திடம் இருந்து ஆந்திரா கைப்பற்றிய கனகநாச்சியம்மன் கோவிலில், இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஆந்திர அறநிலையத்துறை செய்துள்ளது. வேலுார் மாவட்டம், தமிழக - ஆந்திர எல்லையில், புல்லுார் பெரும்பள்ளம் பகுதியில் உள்ள, பாலாறு தடுப்பணையை, ஆந்திர அரசு உயர்த்தி கட்டியது. இதற்கு, தமிழகம் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. தடுப்பணை அருகே, 50 ஆண்டுகளாக, தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கனகநாச்சியம்மன் கோவிலையும், ஆந்திர மாநில அறநிலையத்துறை கைப்பற்றியது. தொடர்ந்து, கோவில் நிர்வாகத்துக்கு, 13 அறங்காவலர்களையும் நியமித்தது. இதில், ஏழு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், கனக நாச்சியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா, இன்று கொண்டாடப்படுகிறது. இன்று, திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து அர்ச்சகர்களை வரவழைத்து, விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. அதிகாலை, 3:00 மணிக்கு அபிஷேகம், 5:00 மணி முதல் தரிசனம், 6:00 மணி முதல் குழந்தை வரம் வேண்டுதல், பேய் ஓட்டுதல், காலை, 8:00 மணி முதல், 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக குளியல் மற்றும் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதி, முடி காணிக்கை செலுத்தும் வசதி, இலவச பொது மருத்துவ முகாம் ஆகியவற்றுக்கு, ஆந்திர அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. விழாவுக்கு, ஏராளமான பக்தர்கள் வருவர் என்பதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், தடுப்பணையில் இரும்பு கம்பி வலை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆந்திரா மற்றும் தமிழக போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !