திருநள்ளார் தீர்த்த குளத்தை துாய்மைப்படுத்தும் பணி
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர கோவிலில், சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால், பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். கோவிலை சுற்றி உள்ள மூன்று குளங்களில், பக்தர்கள் வசதிக்காக, நளன் குளம் புனரமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.சனிபகவான் கோவிலை சுற்றி சரஸ்வதி தீர்த்தம்,கோவில் நுழைவுவாயில் முன்பு பிரம்ம தீர்த்தம் உள்ளது. பிரம்ம தீர்த்த குளத்தை சுற்றி கான்கிரீட் அமைத்து, குளத்தை தூய்மைப்படுத்தும் பணி நடக்க உள்ளது. இதற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வர் கூறுகையில் ‘ பிரம்ம தீர்த்தம் குளத்தில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, குளம் சுத்தம் செய்யப்பட உள்ளது. பின்னர் குளத்தின் உட்பகுதியில் மணல் கொட்டப்பட்டு, மீண்டும் தண்ணீர் நிரப்பப்படும்’ என்றார்.