மீட்கப்பட்ட அம்மன் சிலை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைப்பு
ஆரணி ஆற்றின் கரையில் இருந்து, மீட்கப்பட்ட அம்மன் சிலையை, வருவாய் துறையினர், சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், ஆரணி ஆற்றின் கரையில், கடந்த, 23ம் தேதி, தண்ணரீல் அண்டா ஒன்று மூடி வைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் சிலர், அதை எடுத்து பார்த்தபோது, உள்ளே, 3 அடி பீடத்துடன் கூடிய பித்தளை அம்மன் சிலை வழிபாடு செய்து வைத்திருந்தது தெரிய வந்தது. ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள், சிலையை கைப்பற்றி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து, வட்டாட்சியர் விஜயலட்சுமி கூறுகையில், கடந்த மாதம், 23ம் தேதி பெரியபாளையம் ஆரணி ஆற்றின் கரையில் இருந்து மீட்கப்பட்ட அம்மன் சிலை மற்றும் ஒரு கிராம் தாலி ஆகியவை, ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, ஊத்துக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது, என்றார். - நமது நிருபர் -