சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்
கீழக்கரை: சேதுக்கரை கடற்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4 மணி இருந்து பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்தனர். வெளிமாவட்டங்களில் இருந்தும், ராமநாதபுரம் மாவட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று பித்ரு கடன் பூஜைகளை செய்து வழிபாடு செய்தனர். சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேதுக்கரை செல்லும் வழியில் உள்ள அகத்தியர், விநாயகர் கோயிலின் முன்பு சிதறு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றிக்கொண்டனர். மூக்கையூர்: ராமாயணத்தில் ராவணனின் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை, லட்சுமணன் அறுத்த இடமாதலால், மூக்கையூர் என பெயர் வழங்கப்படுகிறது. இங்குள்ள கடற்கரையில் அதிகாலை முதல் தர்ப்பணம் உள்ளிட்ட பூஜைகளை செய்து கடலில் புனித நீராடினர்.