கோவில்களில் குருப்பெயர்ச்சி, ஆடிப்பெருக்கு விழா
காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி யாகம் நடந்தது. குருபகவான் நேற்று காலை, 9:30 மணிக்கு சிம்மராசியிலிருந்து, கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அதை முன்னிட்டு, காரமடையில் உள்ள லோகநாயகி அம்பாள் சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், குருப்பெயர்ச்சி யாகம் நடந்தது. காலை, 5:30 மணிக்கு கணபதி பூஜை, நவக்கிரஹம், லட்சுமி, குருபகவானுக்கு கலச பூஜையும், தீபாராதனையும், ராசி பெயர்கள், லக்கினம் படித்து, பரிகார ஹோமங்கள் துவங்கின. 8:40 மேதா தட்சணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகயும், கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. 9:30 மணிக்கு குருபகவான் சிம்ம ராசியிலிருந்து, கன்னி ராசிக்கு பிரவேசித்ததை அடுத்து, கலச தீர்த்த அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விமலா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகேவுள்ள சக்தி விநாயகர் கோவிலிலும், கோ-ஆப்ரேடிவ் காலனியில் உள்ள கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரர் கோவிலிலும் குருப்பெயர்ச்சி யாகம் மற்றும் விழா நடந்தது.
அன்னுார்: கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தில், பாடல் பெற்ற, பழமையான காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், தட்சிணாமூர்த்தி சன்னதியில், குருப்பெயர்ச்சி விழாவில், நேற்று, காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம் துவங்கி, 9:00 மணிக்கு நிறைவடைந்தது. காலை 9.27 மணிக்கு சிம்மராசியிலிருந்து, கன்னி ராசிக்கு குருப்பெயர்ச்சி நடந்தது. பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மகா தீபாராதனை நடந்தது. காலை 11:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கியது. இரவு வரை லட்சார்ச்சனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
* அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்றுமுன் தினம் மாலை கணபதி பூஜையுடன் துவங்கியது. இரவு 7:00 மணிக்கு நவகிரக ஹோமம் நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பள்ளியறை பூஜையும், 6:00 மணிக்கு, அபிஷேக பூஜையும் நடந்தது. தட்சிணாமூர்த்தி சன்னதியில், காலை 8:00 மணிக்கு அர்ச்சனை துவங்கியது. காலை 9.00 மணிக்கு குருபகவான் உட்பிரகாரத்தில் உலா வந்தார். காலை 9:27 மணிக்கு குருபகவான் சிம்மராசியிலிருந்து கன்னிராசிக்கு பிரவேசித்தார். பின்னர் குருபகவானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மகா தீபாராதனை நடந்தது. மகா மண்டபத்தில் உற்சவருக்கு ருத்திராட்சம், மஞ்சள் ஆடைகளில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் உற்சவருக்கு மஞ்சள் ஆடை சமர்ப்பித்து வணங்கினர். குருபகவான் சன்னதியில், நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம், துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் ஆடிப்பெருக்கு, அமாவாசை, குருப்பெயர்ச்சியையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, இறைவனை வழிபட்டனர். பெரியநாயக்கன்பாளையம் பூதேவி, ஸ்ரீதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. விழாவையொட்டி, திருவீதியுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள குருபகவான் சன்னதியில், குருபகவான் மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, இறைவனை வழிபட்டனர். காமராஜ் நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலில் குருபகவானுக்கு சிறப்பு பூஜையும், குருஹோமமும் நடந்தது. சாமநாயக்கன்பாளையம் விநாயகர் கோவிலில் குருப்பெயர்ச்சியை நடந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர், அங்காளம்மன், மாரியம்மன், விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கவுண்டம்பாளையம் சிவா நகரில் நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாத ஸ்வாமி கோவில், பாலமலை ரங்கநாதர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
சூலுார்: சூலுார் அருகே கண்ணம்பாளையம் அரசடி விநாயகர், மாகாளியம்மன் கோவிலில், ஆடி பெருக்கை முன்னிட்டு தேர் திருவிழா பூஜைகள், 31ம் தேதி காலை. 7:00 மணிக்கு எல்லை காவல் தெய்வத்துக்கு பொங்கல் வைத்தலுடன் துவங்கியது. மாலை கண்ணம்மை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு அரசடி விநாயகர், மாகாளியம்மன் மற்றும் பழனியாண்டவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி திருவீதியுலா நடந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மாகாளியம்மன் வழிபாட்டுகுழு, பழனியாண்டவர் காவடிக்குழு மற்றும் கண்ணம்பாளையம் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.