உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பூரம் கோலாகலம்: ஆண்டாளுக்கு முத்தங்கி; அம்மனுக்கு வளையல்

ஆடிப்பூரம் கோலாகலம்: ஆண்டாளுக்கு முத்தங்கி; அம்மனுக்கு வளையல்

சேலம்: மாவட்டத்தில், (5.8.16) வெள்ளிக்கிழமை ஆடிப்பூரத்தையொட்டி, கோவில்களில் விசேஷ பூஜை நடந்தது. சேலம், கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில் உள்ள ஆண்டாளுக்கு, பால், மஞ்சள், இளநீர், தயிர், பன்னீர் உட்பட பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், முத்தங்கி அலங்காரம் சாத்தப்பட்டது. அதையடுத்து, அழகிரிநாதருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. அதேபோல். செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் சுவாமி கோவில், ஆனந்த லட்சுமிநாராயண சுவாமி கோவில், சின்னதிருப்பதி பெருமாள் கோவில், சென்றாயபெருமாள் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் நடந்தது.

*ஓமலூர் கடைவீதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், இரண்டாயிரம் வளையல்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வளையல்கள், மஞ்சள் கயிறு உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. கருப்பூர், பத்ரகாளியம்மன் கோவிலில், நேற்று இரவு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
*இடைப்பாடி, கவுண்டம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 2ம் தேதி, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. (5.8.16) வெள்ளிக்கிழமை , கவுண்டம்பட்டி குமரன்பேட்டையில் இருந்து, கோவில் வரை, 500க்கும் மேற்பட்ட பெண்கள், பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின், அவர்கள் கொண்டு வந்த பாலை ஊற்றி, மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
*தலைவாசல், சித்தேரியில் உள்ள வெட்காளி அம்மன் கோவில் ஆடி திருவிழாவில், நேற்று காலை, அம்மனுக்கு பால் குடம், கஞ்சி கலயம் மற்றும் தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 7 மணியளவில், ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், திருமணம் ஆகாதவர்கள் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கலந்துகொண்டு, அம்மனுக்கு வளையல்கள் அணிவித்து, வளைகாப்பு செய்தனர். இளநீர், தேன், நெய், பால் உள்ளிட்ட பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !