பத்மநாப சுவாமி கோவிலின்
புதுடில்லி: "பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில், இதுவரை திறக்கப்படாத, "பி அறையை, தற்போது திறக்க வேண்டாம். கோவிலுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை மதிப்பீடு செய்ய, ஐந்து பேர் கமிட்டியை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. இக்கமிட்டி கோவிலில் நடத்திய ஆய்வின் அடிப்படையில், இடைக்கால அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன் மற்றும் ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்சு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளை திறந்து, அங்குள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணியை துவக்கலாம். ஆனால், அவற்றில் இதுவரை திறக்கப்படாத, "பி அறையை தற்போது திறக்கவேண்டாம். பாதாள அறைகளில், "பி அறை தவிர, பிற அறைகளில் மதிப்பீடு பணி முடிந்த பிறகு, "பி அறையை திறப்பது குறித்து, பரிசீலிக்கப்படும். கோவில் பாதுகாப்புக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு தேவை என, கோருவதை ஏற்க முடியாது. மாநில அரசின் போலீஸ் பாதுகாப்பு போதுமானது. கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு செய்யவேண்டும். கோவில் மற்றும் ஐவர் குழு பாதுகாப்புக்கென ஆண்டுக்கு, ஒன்றரை கோடி ரூபாய் தேவை என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதில், ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் கோவில் நிர்வாகம் வழங்க வேண்டும்; மீதமுள்ள தொகை அரசு செலவிட வேண்டும். பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை பாதுகாக்க, அறைகளைச் சுற்றிலும் பாதுகாப்பு சுவர் அமைக்கப்படவேண்டும். இதுகுறித்து மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் விசாரணை நடத்தப்படும். அப்போது அதுவரை நடந்துள்ள மதிப்பீடு குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சகஸ்ரநாம ஜபம்: ஆயிரம் பேர் பங்கேற்பு: திருவனந்தபுரம்: தேவ பிரசன்னத்தில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், பத்மநாப சுவாமி கோவிலில் விஷ்ணு சகஸ்ரநாம கூட்டு ஜபம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பத்மநாப சுவாமி கோவிலில் நடத்தப்பட்ட தேவபிரசன்னத்தில், கோவிலில் நடத்தப்படவேண்டிய பல்வேறு பரிகார பூஜைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 4.15 மணிக்கு, கோவிலில் கிழக்கு கோபுர வாசல் முதல், தெற்கு கோபுர வாசல் வரையிலும், வடக்கு கோபுர வாசல் வரையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது துவங்கிய விஷ்ணு சகஸ்ரநாம கூட்டு ஜபம் ஒரு மணிநேரத்திற்கும் கூடுதலாக நடந்தது. டாக்டர் எம்.சாம்பசிவன் மந்திரங்களை சொல்லச் சொல்ல, பக்தர்கள் அதை திருப்பிச் சொல்லி சகஸ்ரநாம ஜபம் நடந்தது. நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், அய்யப்ப பக்தர்களும், திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.