சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை
நாகர்கோவில்: சபரிமலை மற்றும் குமரி மாவட்ட கோயில்களில் நிறைபுத்தரிசி பூஜை நடந்தது.ஆண்டின் முதல் சாகுபடியில் விளையும் நெற்கதிர்களை கோயிலில் பூஜை செய்வது, நிறைபுத்தரிசி பூஜை. இதற்கான நாள் திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் குறிக்கப்படும். இதன்படி, நேற்று பூஜை நடந்தது.
சபரிமலை: பூஜைக்காக, சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நேற்று காலை 5 மணிக்கு நடை திறந்ததும் அபிேஷகத்துக்கு பின், நிறைபுத்தரிசி பூஜை தொடங்கியது. நெற்கதிர் கட்டுகளை மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி, பூஜாரிகள் தலையில் சுமந்து கோயிலை வலம் வந்தனர். பின், ஸ்ரீகோயிலுக்குள் நெற்கதிர் கொண்டு செல்லப்பட்டது. பூஜைகள் முடிந்த பின், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, நெற்கதிர்களை பக்தர்களுக்கு வழங்கினார். பின், நெய் அபிேஷகம், பூஜைகள் நடந்தன. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. குமரி மாவட்ட கோயில்களிலும் பூஜை நடந்தது. கன்னியாகுமரி பகவதி அம்மன், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி, நாகர்கோவில் நாகராஜா, மண்டைக்காடு பகவதி அம்மன், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி, பத்மனாபபுரம் நீலகண்டசாமி கோயில்களிலும் நெற்கதிர்களை வைத்து பூஜைகள் நடந்தன.