குகை காளியம்மன் கோவில் வண்டி வேடிக்கை கோலாகலம்
சேலம்: சேலம், குகை காளியம்மன், மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகையில், நேற்று கோலாகலமாக நடந்த வண்டிவேடிக்கையை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். சேலம், குகை காளியம்மன், மாரியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகை முன்னிட்டு, வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. அதில், ஆண்டிசெட்டி தெருவை சேர்ந்த வண்டி வேடிக்கை குழுவினர், 111வது ஆண்டாக வாமன அவதாரத்தில் வாமனர், மகாபியர், வித்யவானி, சுக்ராச்சாரியார் வேடமணிந்து வந்து, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. அதேபோல், அம்பலவாணர் கோவில் தெருவை சேர்ந்த குழுவினர், ராவணனுக்கு சிவன், பார்வதி அலங்காரத்தில் வந்தது பக்தர்களை கவர்ந்தது. மேலும், 14 அலங்கார வண்டிகள் அணிவகுத்துவந்தன. அந்த வண்டிகளில் ராமாயணம், மகாபாரத திருக்கட்சிகள், சிவன், பார்வதி, முருகன், பிள்ளையார், விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள், குகை பகுதியில், வீதி உலா வந்தன. இதில், சிறப்பான அலங்கார வடிவமைப்பை பெற்ற வண்டிகளில், முதல் மூன்று பரிசுகளும், கலந்துகொண்ட அனைத்து வண்டிகளுக்கும், சிறப்பு பரிசுகளும், விழா குழுவினரால் வழங்கப்பட்டன. வண்டி வேடிக்கையை காண, திருச்சி மெயின்ரோடு, குகை பகுதியில் உள்ள, 14 தெருக்கள், அன்னதானப்பட்டி, தாதகாப்பட்டி வரை, மக்கள் கூட்டம் அலைமோதியது. மொத்தம், 50 ஆயிரம் பேர் கண்டுகளித்ததாக, போலீசார் கணக்கிட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்க, குகை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து, 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.