ஆடி வெள்ளி வழிபாடு: கோவை கோவில்களில் கோலாகலம்!
கோவை: ஆடி ஐந்தாவது வெள்ளி கோவை அம்மன் கோவில்களில், சுமங்கலி பெண்களுக்கு மங்கலப்பொருட்களை மூத்த சுமங்கலி பெண்கள் வினியோகித்து அமர்க்களப்படுத்தினர். கோவையில் ஆடி மாதத்தில் வந்த ஐந்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் வெகு விமரிசையாக விழா நடத்தப்பட்டது.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, தங்கப்பாவாடை சாத்துதல், தங்கரதத்தில் அம்மனை அழைத்துச்செல்லுதல், பட்டுவஸ்திரம் சாத்துதல், சகலவித திரவிய அபிஷேகம். மஞ்சள், குங்குமம், மஞ்சள்கயிறு, கண்ணாடிவளையல், கால்களில் அணியும் மெட்டி வழங்குதல், இலவச அன்னதானம் என்று ஏராளமான பொருட்களை கோவில்களில், சுமங்கலி பெண்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள், கோனியம்மன், பெரியகடைவீதி மாகாளியம்மன், ஆர்.எஸ்.புரம்., காமாட்சியம்மன், அன்னபூர்னேஸ்வரி, குறிச்சி குளம் பொங்காளியம்மன் உள்ளிட்ட ஏராளமான கோவில்களில் நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான சுமங்கலி பெண்கள் அம்மனை தரிசித்தனர். அவர்களுக்கு ரவிக்கை, வளையல், பொங்கல், தேங்காய், பழம், மலர்களை, மூத்த சுமங்கலி பெண்கள் கோவில் சார்பில் வழங்கினர். ஆடி மாதத்தில் தொடர்ந்து வரும் ஐந்து வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசித்து, வேண்டுகோளை முன்வைத்து வழிபாடு செய்தால், மாங்கல்யம் நிலைக்கும், கணவனின் ஆயுள் பெருகும் என்பது ஐதீகம் அதனால் ஐந்தாவது வெள்ளி விரதமிருந்து அம்மனின் அருள் பெற்றனர் சுமங்கலிப்பெண்கள்.